அண்மையில் கடலூர் மாவட்ட கெடிலம் ஆற்றில் குளித்த சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தேனியில், கண்மாயில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள பாப்பன்பட்டி கண்மாயில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் சபரீசன், மணிமாறன் மற்றும் பன்னீர் என்ற நபர் உள்ளிட்ட மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர். இவர் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள முத்தாலம்மன் கோவில் திருவிழாவிற்காக உறவினர்கள் வீட்டிற்கு வந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் திருவிழா முடிந்து மாலை வேளையில் சபரீசன், மணிமாறன், ருத்ரன் என்ற மூன்று சிறுவர்களுடன் பாப்பன்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்றுள்ளார். அப்பொழுது சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கினர். இந்த சம்பவத்தில் மூன்று சிறுவர்களையும் காப்பாற்ற முயன்ற பன்னீரும் நீரில் மூழ்கினார். அக்கம்பக்கத்திலிருந்த விவசாயிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டதில் ருத்ரன் என்ற சிறுவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் பன்னீர் மற்றும் சபரீசன், மணிமாறன் ஆகிய சிறுவர்கள் உட்பட மூன்று பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.