தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள சிறிய நகரம் பாறசாலை. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் 23 வயதான ஷாரோன் ராஜ். பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் சிறைப்பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி, தனது வீட்டில் யாருமில்லை எனக் கூறி ஷாரோன் ராஜை கிரீஷ்மா வீட்டுக்கு அழைத்துள்ளார். தனது நண்பர் ஒருவருடன் கிரீஷ்மா வீட்டுக்குச் சென்ற ஷரோன் ராஜ், நண்பனை வெளியிலேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
உள்ளே சென்ற ஷாரோன் ராஜை வழக்கமாகப் பேசி வரவேற்றுள்ளார் கிரீஷ்மா. சிறிது நேரம் இருவரும் தனிமையில் பேசியுள்ளனர். பின்னர், நீ எவ்வளவு கசப்பா இருந்தாலும் குடிப்பியா.. எனக் கிண்டலாக கிரீஷ்மா கேட்டுள்ளார். அதுக்கென்ன குடிச்சிட்டா போச்சு.. எனக் கெத்தாக கூறியுள்ளார் ஷாரோன். உடனே, கிரீஷ்மா கசாயத்தைக் காய்ச்சி எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதை ஒரே மடக்கில் குடித்து காதலி முன்பு தனது பராக்கிரமத்தை நிரூபித்துள்ளார் ஷாரோன். பிறகு, குளிர்பானமும் குடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, வெளியே வந்த ஷாரோனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வாந்தியும் எடுத்துள்ளார். பைக்கில் இருந்த அவரின் நண்பர், ஏன் வாந்தி எடுக்கிறாய் எனக் கேட்டதற்கு அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டுக்குச் சென்ற பிறகு அவரது உடல்நிலை இன்னும் மோசமாகியுள்ளது. இதையடுத்து, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த ஷாரோனின் உடலுறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்க ஆரம்பித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஷாரோன் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார் ஷாரோன் பற்றி அவரது நண்பரிடம் விசாரித்துள்ளனர்.
பின்னர், ஷாரோனின் தந்தை ஜெயராஜ் பாறசாலை போலீஸில் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அதற்கு காரணம் அவரது காதலிதான் என்றும் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் ஷாரோன்ராஜின் உடலில் விஷம் இருப்பதற்கான அடையாளங்கள் தென்படுவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் எல்லாம் போலீசாருக்குத் தெரியவர விசாரணையைத் தீவிரப்படுத்தினர். காதலி க்ரீஷ்மாவிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.. ஷாரோன் வீட்டிற்கு வந்ததும் கசாயமமும் ஜூஸும் கொடுத்ததாகவும் அதன்பிறகே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கிரீஷ்மா சொன்னார். அந்த ஜூஸ் டப்பா காலாவதி ஆகிவிட்டதைத் தெரியாமல் நான்தான் கொடுத்துவிட்டேன். நான்தான் அவரது மரணத்துக்கு காரணம். என்னை கைது செய்யுங்கள் என அழுது புலம்பியுள்ளார்.
சரி, அந்த ஜூஸ் பாட்டில் எங்கே என போலீசார் கேட்க, அதெல்லாம் தூக்கி குப்பையில வீசிவிட்டேன் என மேலோட்டமாக சமாளித்துள்ளார். போலீசாருக்கு கிரீஷ்மா மீது முதல் சந்தேகம் வந்தது இங்கேதான். போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தினர். கிறுகிறுக்கும் அளவுக்கு பல ரகசிய உண்மைகளைக் கொட்டினார் கிரீஷ்மா. நானும் அவனும் காதலித்தது உண்மைதான். ஆனால், எனக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டது. இதனால், ஷாரோனை கூப்பிட்டு நாங்கள் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அழித்துவிடும்படி கூறினேன். ஆனால், அதற்கு அவன் மறுப்பு தெரிவித்தான். மேலும், நாம் கல்யாணம் செய்துகொள்ளலாம் எனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தான்.
இந்த காதலும் நாங்கள் எடுத்துக்கொண்ட போட்டோவும் வெளியே தெரிந்தால் எனது எதிர்காலம் பாழகிவிடுமே எனும் அச்சத்தில், அவனைக் கொலை செய்ய முடிவெடுத்தேன். மெல்லக் கொல்லும் விஷத்தின் வகைகள் மற்றும் போலீசில் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது எப்படி என்பது பற்றி கூகுளில் தேடிக் கண்டுபிடித்தேன். அதன்படி, வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்தேன் என கிரீஷ்மா போலீசுக்கு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதேநேரம், ஜாதக நம்பிக்கைப்படி கல்லூரி மாணவர் ஷாரோன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இந்த கொலை திட்டத்தில் கிரீஷ்மாவுக்கு மட்டும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கிரீஷ்மாவின் பெற்றோரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்து வருகின்றனர். எனவே கூடுதல் விசாரணை தேவைப்படுகிறது" என்று போலீஸார் தரப்பில் சொல்லப்படுகிறது.