சேலத்தில், வீட்டு மொட்டை மாடியில் படுத்துத் தூங்கிய கார் ஓட்டுநரை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மணியகாரனூர் பாண்டு நகரை சேர்ந்தவர் அபிஷேக் மாறன் (29). இவர் சொந்தமாக 3 கார்கள் வைத்துள்ளார். அவற்றை தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்துள்ளார். அதே நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜெபினா. காதல் திருமணம் செய்து கொண்ட இத்தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு ஆண்டுக்கு முன்பு பிரிந்து விட்டனர். அதன்பின் ஜெபினா, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
அபிஷேக் மாறனின் தந்தை மாறன், முன்னாள் ராணுவ வீரர். 2004ம் ஆண்டு இறந்து விட்டார். தாயார் யசோதா, ராணுவத்தில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அபிஷேக், மணியனூரில் உள்ள பாட்டி கண்ணம்மாவுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் (மே 5) இரவு சாப்பிட்டுவிட்டு, வீட்டு மொட்டை மாடியில் சென்று படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் அபிஷேக்கின் உறவினர் ஒருவர் அவரை செல்போனில் அழைத்துள்ளார். பலமுறை முயற்சித்தும் அவர் அழைப்பை ஏற்காததால் அவரே நேரடியாக வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது மொட்டை மாடியில் அபிஷேக் மாறன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்கள், வீட்டின் படிக்கட்டு வழியாக மொட்டை மாடிக்குச்சென்று அங்கு கட்டிலில் படுத்திருந்த அபிஷேக் மாறனை கழுத்து அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். சடலத்தை, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட அபிஷேக் மாறனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு அபிஷேக், அன்னதானப்பட்டியில் இளம்பெண் ஒருவர் மீது காதல் தகராறில் ஆசிட் வீசினார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் உயிர் பிழைத்தார். வழக்கில் இருந்தும் அபிஷேக் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கருவாட்டு மண்டியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர் தவிர மேலும் சில பெண்களுடனும் அபிஷேக்கிற்கு தொடர்பு இருந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் யாராவது அபிஷேக்கை கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கும் காவல்துறை, வழக்கை விசாரிப்பதற்காக தனிப்படையும் அமைத்துள்ளது. அபிஷேக்கின் நெருக்கமான நண்பர்கள், அவர் வேலை செய்து வந்த நிறுவனம், அன்றாடம் அவருடைய காரில் சென்று வரும் நபர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அபிஷேக்கின் செல்போனில் பதிவாகியுள்ள எண்களை வைத்தும், அவர் கடைசியாக யார் யாரிடம் பேசினார் என்ற ரீதியிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.