நாமக்கல் அருகே, பள்ளிக்கு குடிபோதையில் வந்த ஓவிய ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, நூறாண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக செந்தில் முத்துகுமார் (45) என்பவர் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று (ஆகஸ்ட் 26) காலை பள்ளிக்கு தள்ளாடியபடியே வந்தார். பள்ளி பதிவறைக்கு கையெழுத்திடச் சென்ற அவர், அங்கேயே திடீரென்று மயங்கி விழுந்தார்.
அவர் மதுகுடித்திருப்பதும், போதையில் மயங்கி விழுந்ததும் தெரிய வந்தது. சக ஆசிரியர்கள் அவருடைய போதையை தெளிய வைக்க முயற்சித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் இதுகுறித்து செந்தில் முத்துக்குமாரிடம் விசாரித்தபோது அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த தலைமை ஆசிரியர் இதுகுறித்து ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தலைமை ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, போதை ஆசிரியரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியரே பணி நேரத்தில் குடிபோதையில் வந்தது, மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.