Published on 09/11/2023 | Edited on 09/11/2023

வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன். இவர் தன்னால் முடிந்த சமூக சேவைகளைச் செய்து வருகிறார். ஆண்டுதோறும் தீபாவளிக்கு ஆதரவற்றவர்கள், சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகளுக்குப் புத்தாடைகளை வழங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு, வேலூரில் நிரந்தர வீடு கூட இல்லாமல் வாசிக்கும் 11 நரிக்குறவர் குழந்தைகளை வேலூரில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்து வந்தார்.
அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த உடைகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்ல, ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைந்த குழந்தைகள் தங்களுக்கான உடைகளை அவர்களே தேர்வு செய்து புதுவித அனுபவத்தைப் பெற்றனர். தங்கள் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை இவர்களும் ஒரு நாளாவது அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனைச் செய்து வருவதாக அன்பரசன் தெரிவித்தார்.