போலி முகவரை நம்பி மலேசியா சென்று பாஸ்போர்ட் வரை இழந்து தவிக்கும் கணவரை மீட்கவும், குடும்ப வறுமையைப் போக்க படிப்பைத் துறந்து கூலி வேலைக்குச் செல்லும் மகன்களின் படிப்பைத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவி கண்ணீர் கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த கோரிக்கை நக்கீரன் இணையத்தில் வீடியோவாக (செப்டம்பர் 24) வியாழக் கிழமை வெளியானது. வெளியான அடுத்த சில நிமிடங்களில் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு சாத்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். தச்சுத் தொழிலாளி. மனைவி மற்றும் 3 மகன்கள். குடும்ப வறுமையைப் போக்க ஆங்காங்கே கடன் வாங்கியவர் அந்தக் கடன்களை அடைக்க மீண்டும் கடன் வாங்கி மலேசியாவுக்குச் சென்றார். சென்ற இடத்தில்தான் தெரிந்தது, தான் ஏமாற்றப்பட்டது. சில மாதங்கள் ஓரளவு சம்பளம் கிடைக்க அதன் பிறகு தலைமறைவு வாழ்க்கை தான். தன்னை எப்படியாவது மீட்டுச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று குடும்பத்தினரிடம் கண்ணீர் வடிக்க, மாவட்ட ஆட்சியல் உமாமகேஸ்வரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவரது பாஸ்போர்ட் பறித்து வைத்துக் கொண்டதால் அதற்குப் பதிலாக தற்காலிக பாஸ்போர்ட் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், விமான டிக்கெட், அபராதம் கட்ட பணமின்றி தவித்து வருகிறார் வேலாயுதம்.
இந்த நிலையில், புயலில் வீட்டை இழந்து சின்ன குடிசை போட்டு வாழும் வேலாயுதத்தின் குடும்பத்தினர் அன்றாட உணவுக்கே தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், 3 மகன்களில் 2 பேர் பள்ளி, மற்றும் கல்லூரி படிப்பைத் துறந்து கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். மற்றொரு மகன் மட்டும் 10 ஆம் வகுப்பு படிக்கிறார். அவரும் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் தான் அந்த குடும்பம் குறித்து, அதே ஊரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விஜயராஜ் மற்றும் ஊடக நண்பர்கள் மூலம் தகவல் அறிந்து வேலாயுதம் வீட்டிற்குச் சென்றோம். அப்போது, "மலேசியாவில் தவிக்கும் எனது கணவரை மீட்கவும், கூலி வேலைக்குச் செல்லும் மகன்களின் படிப்பைத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் உழைப்பில் சாப்பிடும் நிலை வேதனையாக உள்ளது" என்ற வேலாயுதம் மனைவியின் கண்ணீர் கோரிக்கையையும் வீடியோவாகப் பதிவு செய்து நக்கீரன் இணையத்தில் வியாழக்கிழமை மதியம் செய்தியாக வெளியிட்டோம்.
நக்கீரன் இணைய செய்தியைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி.. அடுத்த ஒரு மணி நேரத்தில் உடனடியாக வருவாய்த் துறை அதிகாரிகளை அனுப்பி குடும்ப நிலை குறித்த தகவல்களைப் பெற்று நடவடிக்கையைத் தொடங்கி உள்ளார். மேலும் 'மக்கள் பாதை' அமைப்பினரும், மலேசியாவில் உள்ள தன்னார்வலர்களும் நக்கீரன் வீடியோவைப் பார்த்து வேலாயுதத்தை மீட்டுச் சொந்த ஊருக்கு அனுப்புவதாக உறுதி அளித்துள்ளனர்.
நடவடிக்கை எடுத்து வரும் அனைவருக்கும், வேலாயுதம் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறி வருகின்றனர்.