இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 2-ம் தேதி நாடும் முமுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அன்றைய தினம் வீடுகள், கோவில்கள் மற்றும் காவல் துறையினரிடமிருந்து அனுமதி பெற்ற இடங்களில் புது விநாயகர் சிலையை வைத்து இந்துக்கள வழிபடுவார்கள்.
இதற்காக களிமண்ணை மூலப்பொருளாக கொண்டு கடந்த ஒரு மாதங்களாக வித,விதமான விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக வட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் குவிந்து, விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்த பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
இதில் குமரி மாவட்டத்தில் 2-ம் தேதி பூஜைக்கு வைக்கப்படும் சிலைகள் 4,5,6 ஆகிய ழூன்று நாட்கள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. இதில் பிளாஸ்டர் ஆப் பாரீஸில் செய்யப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தால் தண்ணீர் மாசுப்பாடு ஏற்படும் என்பதால் "பிளாஸ்டர் ஆப் பாரீஸ்" மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சுற்றுச்சூழல் துறை தடை விதித்துள்ளது.
அதே போல் நீர் நிலைகளில் மாசு ஏற்படாதவாறு இந்த முறை குமரி மாவட்டத்தில் கிழங்கு மாவிலான சிறு, சிறு சிலைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் போது, அதில் வாழும் சிறு உயிரினங்களுக்கும், அது உணவாகவும் இருக்கும் என்று அந்த சிலை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்த முறை அன்னப்பறவை விநாயகர், தாமரை விநாயகர், ழூஷிக விநாயகர், சிங்க முக விநாயகர், மான் விநாயகர், பாகுபலி விநாயகர் என பன்முக தோற்றங்களில் விநாயகர் சிலைகள் 1 அடி முதல் 10 அடி வரை தயாரிக்கப்பட்டுள்ளன.