![INCIDENT IN PUDUCHERRY](http://image.nakkheeran.in/cdn/farfuture/I_VOsAVtGoPS-X5Mru62RdAMo7ng6Qwla3R-GyfRRXY/1598377729/sites/default/files/inline-images/daDQas.jpg)
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனனையில், கரோனா நோயாளிகளுக்கென தனிப்பிரிவு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் முழுமையாக மூடப்பட்டுள்ளது. மேலும் கரோனா நோயாளிகள் பிரிவில் கூடுதலாக படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று (25.08.2020) மருத்துவமனையின் படிக்கட்டு வழியே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை அறிந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக அவரை தலை வழியாகவே மேலே இழுத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. மன அழுத்தம் காரணமாகவும், குடும்பப் பிரச்சனை காரணமாகவும் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அவர் குறித்து விசாரித்ததில், புதுச்சேரியைச் சார்ந்தவர் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கரோனா பிரிவில் நோயாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் தன்வந்திரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.