மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை ஒன்று எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த தாயையும், சேயையும் முட்டாமல் அவர்களை பாதுகாப்பாக எகிறி குதித்து ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போன்று மிகவும் பிரபலமானது மஞ்சுவிரட்டு. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்கும் இந்த வீர விளையாட்டுகளில் பங்கேற்பவர்களுக்கு காயம் ஏற்படுவதும், ஏன் சில சமயங்களில் உயிரிழப்பு நிகழ்ந்த சம்பவங்களும் உண்டு.
இப்படி இருக்க மஞ்சுவிரட்டில் அவிழ்ந்துவிடப்பட்ட காளை எதிர்பாராதவிதமாக குழந்தைகளுடன் குறுக்கே வந்த தாயையும், சேயையும் முட்டாமல் எகிறி குதித்து ஓடிய வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் சிவகங்கை மாவட்டம் சிராவயல். அங்கு நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட எருது சீறிப் பாய, எருது அவிழ்த்துவிடப்பட்டதை அறியாத பெண் ஒருவர் தனது குழந்தைகளை கைகளில் பற்றியபடி மைதானத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென எருது வருவதை சுதாரித்துக் கொண்ட தாய் தன் குழந்தைகளுடன் கீழே படுத்துக்கொள்ள, அதிவேகத்தில் வந்த எருது அவர்களை ஒன்றும் செய்யாமல் ஒரு பாதிப்பும் ஏற்படாதவண்ணம் தாவி எகிறி குதித்து ஓடியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு இருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வீடியோ காட்சி தற்பொழுது இணையத்தை கலக்கி வருவதோடு பாராட்டையும் பெற்று வருகிறது தாய்மையையும், மனிநேயத்தையும் உணர்ந்த அந்த எருதின் செயல்.