பாலியல் தொல்லை தொடர்பான புகாரில் அண்மைக்காலமாகப் பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் பொறுப்புகளில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில் கோவையில் ஒரு மாணவியும், கரூரில் ஒரு மாணவியும் பாலியல் தொல்லையால் கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல்லில் நர்சிங் கல்லூரி தாளாளர் மீது மாணவிகள் புகார் கூறிய நிலையில் கைது செய்யப்பட்டவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதேபோல் ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியைக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கடந்த மாதம் 26 ஆம் தேதி ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணுக்கு ரேடியாலஜி மருத்துவர் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரித்த நிலையில், அது தொடர்பான அறிக்கை மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவர் சக்கரவர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.