![](http://image.nakkheeran.in/cdn/farfuture/_L6Jdxnw4R0hOK1FeIxUNJS_8TTyyPny1-S7Y-iotOo/1533347674/sites/default/files/inline-images/rajini%20voice.jpg)
மலிவான விளம்பரத்துக்காக நடிகர் ரஜினிகாந்தை "மோசடி பேர்வழி" என அறிவிக்கக்கோரிய வழக்கில் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா சென்னை உயர்நீதிமன்றதில் தாக்கல் செய்த மனுவில், "படத்தயாரிப்பு செலவுகளுக்காக இயக்குனர் கஸ்தூரிராஜா 65 லட்சம் ரூபாயை கடனாகப் பெற்றதாகவும். அந்த தொகையை தான் கொடுக்காவிட்டால் தனது சம்பந்தியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொடுப்பார் என்ற உத்தரவாதத்துடன் காசோலைகள் கொடுத்துள்ளார். காசோலைகள் பணமில்லாமல் திரும்பி வந்ததால் வழக்கு தொடர்ந்தார்.
இதனிடையே, ரஜினி பெயரை தவறாக பயன்படுத்திய தன்னை ஏமாற்றிய கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிக்கு உத்தரவிட வேண்டும் இல்லாவிட்டால், ரஜினி, கஸ்தூரிராஜா இருவரும் சேர்ந்தே ஏமாற்றியதாக கருதி அவர்களை "மோசடி பேர்வழி" என அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முகுந்த்சந்த் போத்ரா சிவில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில், தவறான எண்ணத்துடனும், தன்னிடம் பணம் பறிக்கும் எண்ணத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அதில் தன்னை சேர்த்திருப்பது பிரபலமடையும் நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது என்றும், தனக்கு எதிரான இந்த வழக்கு தமக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், சம்மந்தியான கஸ்தூரிராஜாவுடனான உறவுக்கு இவ்வழக்கு கெடுதலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி என்.சதீஷ்குமார் "மலிவான விளம்பரத்துக்காக ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்ந்து சட்டத்தை பயன்படுத்தியுள்ளார். இதுபோன்ற வழக்குகளை ஆரம்பகட்டத்திலேயே தூக்கியெறியாவிட்டால், மலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடும் மனுதாரர் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.
பிரபலமானவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் தொடர்ந்து சில நாட்களுக்கு செய்திகளில் இடம்பெறுவது அனைவரும் அறிந்ததே. அதுபோலத்தான் முகுந்த் சந்த் போத்ராவும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மனுதாரரின் கோரிக்கையில் அடிப்படை முகாந்திரம் இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்கிறேன். நீதித்துறையை தவறாக பயன்படுத்தியதற்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.