நெல் இரா.ஜெயராமன் இன்று (06.12 .2018) அதிகாலை 5 மணி அளவில் சென்னை தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனையில் காலமானார்.
இன்று காலை 8.00 மணி முதல் 11 மணி வரை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனை அருகில் ரெத்னா நகர் 23/2, 2வது தெருவில் உள்ள திருவாரூர் செந்தூர் பாரிக்கு சொந்தமான வளாகத்தில் (செந்தூர் பாரிக்கு சொந்தமான அப்பார்ட்மெண்ட்) பொதுமக்களின் அஞ்சலிக்காக நெல் ஜெயராமனின் உடல் வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், வேன் மூலம் அவரது சொந்த கிராமமான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்திற்கு மாலை 5 மணியாவில் கொண்டு செல்லப்படும்.
அவரது இல்லத்தில் நாளை (07.12.2018) பகல் 12.00 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த, கட்டிமேடு கிராமத்தில் பிறந்தவர் நெல் ஜெயராமன். , ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராக போராடி வந்தார். பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றியதற்காக மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்றுள்ளார்.
புற்றுநோயால் அவதியுற்று வந்த அவர், சென்னை தேனாம்பேட்டையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்த நிலையில் இன்று (06.12.2018) காலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவர் உடல்நலம் தேறி வரவேண்டும் என்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கா நிதி உதவி அளித்தார். அதிமுக அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, விஜயபாஸ்கர், நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி ஆகியோர் நேரில் சந்திது உடல் நலம் குறித்து கேட்டறிந்து முதல் அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி தேவையான மருத்துவ சிகிச்சைகளையும், நிதி உதவிகளையும் செய்தனர். இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன், சத்தியராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் நேரில் சந்தித்து சிசிக்சைக்காக நிதி உதவி அளித்தனர்.