தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 2018 ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் வங்கி பயிற்சிக்காக தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வந்தவர் ரயிலில் இருந்து இறங்கி தங்கும் விடுதிக்கு செல்ல ஆட்டோ ஒன்றை பிடித்துள்ளார். ஆனால் ஆட்டோ நகர் முழுவதும் சுற்றிவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் தன்னுடைய நண்பர்களிடம் செல்போனில் தங்கும் விடுதி ரயில் நிலையத்தில் இருந்து எவ்வளவு தூரம் என விசாரித்துள்ளார். அப்போது விடுதி ரயில் நிலையத்திற்கு அருகில்தான் உள்ளது என நண்பர்கள் கூற, இது குறித்து ஆட்டோ ஓட்டுனரிடம் வினவியுள்ளார் அந்த பெண். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தி அந்த பெண்ணை நள்ளிரவில் நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுவிட,
இரவு நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரிடம் அந்த பெண் விடுதி குறித்து விசாரித்துள்ளார். ஆனால் போதையில் இருந்த அவர்கள் அந்த பெண்ணை கடத்தி சென்று பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் இருவரை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் கண்டிப்பாக குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள், மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினேஷ், புருஷோத்தமன், வசந்த், அன்பரசன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கில் தினேஷ், புருஷோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகிய நால்வருக்கும் சாகும் வரை சிறை (ஆயுள் தண்டனை) விதித்து உத்தரவிட்ட தஞ்சை மகளிர் நீதிமன்ற நீதிபதி எழிலரசி, ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.