கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம்.
இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.