கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு மாரியம்மன்கோவில் தெருவில் வசித்து வருபவர் தேசிங்கு (வயது55) விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் காலை தனது மனைவி மற்றும் மகனுடன் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான முல்லை அரும்பு தோட்டத்திற்கு சென்றார். அங்கு அவர் விவசாய வேலைகளை முடித்துவிட்டு குடும்பத்துடன் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேசிங்கு மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த மரம் மற்றும் இரும்பிலான அலமாரிகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் அலமாரிகளில் வைத்திருந்த 18 பவுன் நகைகள், 300 கிராம் வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ 50 ஆயிரம் பணம் ஆகியவை காணவில்லை.
உடனே அவர் இதுபற்றி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை பார்வையிட்டனர். மேலும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தேசிங்கு மகன் மணிகண்டன் சொந்த வீட்டில் திருடியது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து மணிகண்டன் கைது செய்யப்பட்டார். கைதான மணிகண்டனிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சொந்த வீட்டில் திருடி கைதான மணிகண்டன் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், 'எனது மனைவி சின்னத்திரையில் நடித்து வருகிறார். அவர் சொந்தமாக படம் இயக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இருந்து வந்ததால், அவருக்கு பணம் தேவைப்பட்டது. விநாயகர் சதூர்த்தி அன்று இருவரும் சந்தித்து திட்டம் தீட்டி எனது அப்பா வீட்டில் திருட நானும் எனது மனைவியும் முடிவெடுத்து, வீட்டில் பொருட்களை திருடினோம். திருடு போன மாதிரி நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானதால் பொருட்களை வாங்க வந்த எனது மனைவி சின்னத்திரை நடிகை தலைமறைவாகி விட்டார்' என கூறியுள்ளார். சொந்த வீட்டிலேயே மகன் திருடி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.