விபத்துகள், திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் மூன்றாவது கண்ணாக சிசிடிவி கேமராக்கள் முக்கிய பணியாற்றி வருகிறது. இதனால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தடுக்கப்படுவதோடு குற்றவாளிகளைக் கண்டறியவும் போலீசாருக்கு சிசிவிடி காட்சிகள் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் ஜவுளிக்கடை ஒன்றுக்கு கும்பலாக வந்த பெண்கள் உடைகள் வாங்குவதுபோல் துணிகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 7 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆடைகளை அந்த கும்பல் திருடிச் சென்றதாகக் கடையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியது. அதைத் தெரிந்து கொண்ட அந்தப் பெண்கள், சிசிடிவி கட்சியால் தாம் மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்து, தாங்கள் திருடிய அனைத்து பொருட்களையும் மொத்தமாக பார்சல் கட்டி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். விஜயவாடாவைச் சேர்ந்த அந்தப் பெண்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அந்தக் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.