தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாகத் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் விளங்கி வருகிறது. அதன் காரணமாக இங்கு வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் இங்கு அளவுக்கு அதிகமான வாகனங்கள் வருவதால் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன.
இதனையடுத்து கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ - பாஸ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது. இந்த செயல்முறை தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல நவம்பர் 18ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது எனத் திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பொதுநலன் கருதியும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள்) திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்குச் செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியைத் தாண்டிச் செல்லத் தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது. இந்த அறிவிப்பு 18.11.2024 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு மற்றும் பழனி வழியாக வரக்கூடிய வாகனங்கள் கொடைக்கானல் மலையின் அடிவாரப் பகுதியில் நிறுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.