நிபந்தனைகளை ஏற்பதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததால், பிரசாத் ஸ்டூடியோவிற்குள் சென்று உடைமைகளை எடுக்க, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இளையராஜா செல்லும் நாளன்று ஸ்டூடியோவிற்கு பாதுகாப்பு வழங்க, சென்னை காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் 1976-ஆம் ஆண்டு முதல் தனது படங்களுக்கு இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்தநிலையில், பிரசாத் ஸ்டூடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இடத்தைக் காலி செய்வது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள, தானே எழுதிய இசைக் கோர்ப்புகள், தனக்குச் சொந்தமான இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜாவை அனுமதிக்கக் கடும் ஆட்சேபம் தெரிவித்த பிரசாத் ஸ்டூடியோ தரப்பு, பின்னர் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க ஒப்புதல் தெரிவித்தது. இளையராஜா அதனை ஏற்றுக்கொண்டு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரசாத் ஸ்டூடியோவின் நிபந்தனைகளின்படி, கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும், இடத்திற்கு உரிமை கோரமாட்டேன் என்றும், இளையராஜா தரப்பில் மெமோ தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், பிரமாணப் பத்திரமாக இல்லாமல் மெமோவாக மட்டுமே தாக்கல் செய்துள்ளதாக பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது இளையராஜா தரப்பில், ஆயிரம் படங்களுக்கும் மேலாக இசையமைத்து, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் தான், எப்போதும் வார்த்தை தவறியதில்லை என்றும், கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்கியதில்லை என்றும் இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.
பின்னர், இளையராஜா தரப்பு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதீஷ்குமார், ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டூடியோவிற்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துவரவும் இளையராஜாவிற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். இளையராஜாவுடன் அவரது ஒரு உதவியாளர் மற்றும் இரண்டாம் இசை உதவியாளர்கள் செல்லவும் அனுமதித்துள்ளார்.
உள்ளே சென்றுவரும் நடைமுறைகளுக்காக, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையராக வி.லட்சுமிநாராயணன் என்பவரை நியமித்து உத்தரவிட்டதுடன், பொருட்களை எடுக்கும் தேதி குறித்து இருதரப்பு வழக்கறிஞர்களும் பேசி முடிவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
பொருட்களை எடுக்க இளையராஜா வரும் நாளன்று காவல்துறை பாதுகாப்பு வேண்டுமென பிரசாத் ஸ்டூடியோ கோரிக்கை வைத்திருந்ததால், உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.