நெல்லை மாவட்டம் பாளை கக்கன் நகர் அருகே கிருபா நகர் பகுதியில் உள்ள இங்கு ஒரு மீன் பண்ணை அமைந்துள்ளது. இதன் பின்புறமுள்ள முல்லைச் செடிகள் நிறைந்த பகுதியில் மலைப்பாம்பு நடமாட்டம் இருந்துள்ளது.
இது குறித்து அப்பகுதியினர் பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலர் வீர ராஜா, முருகன், பாலன் உலகமுத்து மற்றும் வீரர்கள் விரைந்து சென்று அந்தப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு புதருக்குள் பதுங்கியிருந்த 11 அடி நீளம் மலைப்பாம்பை பிடிக்க நீண்ட நேரம் போராடினார். இதையடுத்து பாம்பு பிடிக்கும் நிறுவுனர் ராமேஸ்வரம், வனத்துறை ஊழியர் பால்பாண்டி ஆகியோர் உதவியுடன் புதருக்குள் இருந்த மலைப் பாம்பையும் அதன் 30 முட்டைகளையும் மீட்டனர். பிடிபட்ட பாம்பு மற்றும் முட்டைகள் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அவற்றை பொன்னாக்குடியில் சமூக வனக்காடு பராமரிப்பு அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில் சமீப நாட்களாக இப்பகுதியில் ஆட்டுக்குட்டி, கோழி போன்றவைகள் காணாமல் போனது. மலைப்பாம்பு நடமாட்டம் இருந்ததால் நாங்களும் அதனைத் தேடி வந்தோம். இப்பகுதியிலுள்ள ஒரு புதருக்குள் பாம்பு ஊர்ந்து சென்றதை கவனித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். பாம்பு இவ்வளவு முட்டைகளுடன் சிக்கியது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.
இது குறித்து வனத்துறையின் கால்நடை டாக்டர் சுகுமார் கூறுவது.
நெல்லை பகுதியில் 92ன் ஆண்டு பெய்த பெரும் மழை வெள்ளத்தின் போது ஏராளமான மலைப்பாம்புகள் தாமிரபரணியில் அடித்து வரப்பட்டது. இவை ஆங்காங்கே கரை ஒதுங்கி இனப்பெருக்கம் செய்தன. அப்போது முதல் மலைப்பாம்புகள் நீர் நிலைகளிலும் கரையோரங்களிலும் அடிக்கடி பிடிபடுகின்றன.
ஆனால் முட்டைகளுடன் இப்பகுதியில் மலைப்பாம்பு பிடிபட்டது இதுவே முதல்முறை. இந்த பாம்பிற்கு ஏழு வயது இருக்கலாம் 19 கிலோ எடை உள்ளது. மலைப்பாம்புகள் ஆண்டிற்கு முதல் மூன்றுமுறை முட்டைகள் இடும். ஒரு முறை 20 முதல் 35 முட்டைகள் வரை இடும் குஞ்சு பொறிக்கும். இவை 40 வயது வரை வாழும் தன்மையுடையது.
அடுத்த 35 நாட்களுக்கு பின்னர் குஞ்சுகள் வெளியில் வரும். தற்போது 35 நாட்கள் கழிந்து விட்டதால் தாய் பாம்பின் அடை காப்பு தேவை இல்லை. இதனால் தாய் பாம்பை மட்டும் மணிமுத்தாறு தலையணை அருவி பகுதியில் இயற்கை சூழலில் விட்டுவிடுவோம் 30 முட்டைகளை அதற்கு தேவையான வெப்பநிலை நிலையில் பாதுகாத்து குஞ்சுகள் வெளியேவர ஏற்பாடு செய்வோம் பின்னர் அவை பத்திரமாக வனப்பகுதியில் விடப்படும் என்றார்.