அதிமுக தற்போது இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு பிரிவினரும் பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்படுகின்றனர். இரு பிரிவினரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றங்களைச் சுமத்திக் கொண்டும் கட்சி எங்களுடையதுதான் என்று கூறிக்கொண்டும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அதிமுக சார்பில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இல்லாத கட்சிக்கு நிர்வாகிகள் போட்டு என்ன பயன் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரைச் சாடியுள்ளார்.
கூட்டத்தில் பேசிய அவர், “தேனி மாவட்டத்தில் வெற்றி பெற்ற பின் வந்து கேள்வி கேளுங்கள். நாங்கள் பதில் சொல்லுகிறோம். அதிமுக தொண்டர்களின் சார்பாக நாங்கள் பதில் சொல்லுகிறோம். அதிமுக நிர்வாகிகள் இரண்டு நாட்கள் பார்த்ததும் சிரிக்கிறார்கள். தேனிக்கு போய்விட்டு வந்ததும் இருக்கமாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்களை மூளைச்சலவை செய்கின்றனர்.
நீங்கள் நல்லவர் என்றால் நீங்கள் கூப்பிடாமலேயே வாசலில் வந்து எல்லோரும் இருப்பார்களே. அவ்வாறு இல்லை என்பதால்தானே உங்களிடத்தில் யாரும் வரவில்லை. இங்கு இருக்கும் நிர்வாகிகள், அவர்கள் பதவி கொடுக்கிறேன் எனச் சொல்லுகிறார்கள், நான் அங்கு செல்லப்போகிறேன் எனச் சொல்லுகிறார்கள். இல்லாத கட்சிக்கு நிர்வாகிகள் போட்டு என்ன பயன். புயல் கரையைக் கடக்கும் பகுதி எப்பொழுதும் சேதாரம் ஆகும். சேதாரம் ஆகாமல் நீங்கள் நின்றீர்கள் என்றால் வரலாற்றில் நீங்கள் நிற்பீர்கள்” எனக் கூறினார்.