கர்நாடக மாநிலத் துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தமிழகத்திற்குக் காவிரி நீரைத் தர முடியாது; மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இவரின் இந்தக் கருத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அண்மையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லி சென்று ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது, மேகதாது அணை கட்டக்கூடாது என்ற நிலைப்பாட்டில் திமுக அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''இனி கர்நாடகத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. பேச்சுவார்த்தை பேசி பயனில்லை. எங்களுக்கு நடுவர் மன்றம் வேண்டுமென்று கேட்டு அதன் மூலம்தான் சாதித்தோம். மறுபடியும் பேச்சுவார்த்தைக்குப் போனீர்கள் என்றால் நாளைக்கு எந்த கோர்ட்டுக்கும் போக முடியாது. இன்னும் சில பெரிய புத்திசாலிகள் நீர்வளத்துறைக்கு கடிதத்தை எழுதிய முதலமைச்சர் அத்தாரிட்டி (காவிரி ஆணையம்) அலுவலகத்திற்கு எழுதலாமே எனக் கேட்கிறார்கள். முதலமைச்சர் பிரதமருக்குத் தான் கடிதம் எழுதுவார். நிலைமையைக் கருதி அவர் மந்திரிக்கு எழுதி இருக்கிறார். அத்தாரிட்டிக்கு முதல்வர் கடிதம் எழுத வேண்டும் என்று சொல்வது புத்திசாலித்தனம் அல்ல'' என்றார்.