நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக புகார் கொடுத்த நடிகையிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “தயவு செய்து சமூகத்திற்கு தேவையான கேள்விகளை கேளுங்கள். 11 வருசமாவா ஒரே குற்றச்சாட்டு. நான் ஒரு கேள்வி கேட்கிறேன் என்னை ஒரு பொண்ணு ஏமாற்றிவிட்டு போய்விட்டது. அவருடைய கணவனுடன் வாழ்ந்து வருகிறது. நான் போய் சமூகத்திடமும் செய்தியாளர்களிடமும், என்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டு போய்விட்டது என சொல்லிக் கொண்டிருந்தால் காரி துப்ப மாட்டீர்கள். அதை ஏன் எல்லாரும் ரசிக்கிறீர்கள். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
என்னை சுற்றி எத்தனை லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. இதையே திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருந்தால் எப்படி. எனக்கு முன்னாடி ஆறு பேர் இருக்கிறார்கள். உங்களுடைய வாட்ஸப் நம்பரை கொடுங்கள் நான் அனுப்புகிறேன். இதே மாதிரி எனக்கு முன்னாடி 5 பேரிடம் சொல்லி இருக்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் ஏன் இந்த மாதிரி குற்றச்சாட்டு வருகிறது. ஒரு வேலையை செய்பவரிடம் அவசியமான கேள்விகளை கேளுங்கள். அவசியமற்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும். நீங்க இல்ல நான் இல்ல யார் காவல்துறையில் புகார் கொடுத்தாலும் போலீசார் விசாரிப்பார்கள். அது அவர்களுடைய கடமை.
உண்மையிலேயே நான் குற்றவாளி என்றால் நடவடிக்கை எடுங்கள் என்றுதானே சொல்கிறேன். நான் என்ன வேற ஊருக்கு ஓடிப் போய்விட்டேனா அல்லது வேற மாநிலத்திற்கு போய்விட்டேனா. திமுக ஆட்சியில் என் மீது நடவடிக்கை எடுங்களேன். என்ன நடவடிக்கை தான் எடுப்பீர்கள் எடுங்கள் பார்க்கிறேன். அந்த பயம் உங்களுக்கு இருக்கட்டும். நேற்று திருப்பூரில் கூடிய கூட்டத்திற்கு மேலும் பல குற்றச்சாட்டுகள் என் மீது வரும்.” என்றார்.