அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியிருக்கலாம். ஏன் செய்யவில்லை? மத்திய அரசை எதிர்த்தால் அடுத்த நாள் யாருக்கும் அமைச்சர் பதவி இருக்காது என தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
காவிரி பிரச்சனையில் தற்போதைய நிலைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடியும் நாளில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். ஏன் முன்கூட்டியே நடத்தவில்லை? கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டுமா? இந்த கூட்டம் நடத்தி தீர்மானம் போட்டால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிடுமா? தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஸ்கீம் குறித்து கடைசி நேரத்தில் தான் மத்திய அரசு விளக்கம் கேட்குமா?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது? காவிரி விவகாரத்தில் முதல்வரை பிரதமர் சந்திக்க மறுத்ததாக எங்களிடம் கூறினார்கள். முதல்வரும் துணை முதல்வரும் டெல்லி சென்று மேலாண்மை வாரியம் வேண்டும் என கேட்க வேண்டியதுதானே? தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்னும் 50 ஆண்டுகளுக்கு தேசிய கட்சிகளால் ஆட்சிக்கு வரமுடியாது. கர்நாடகாவில் பாஜகவோ, காங்கிரசோ வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் நமக்கு காவிரி வாரியம் அமைத்து கொடுத்துவிட்டு அங்குபோய் ஓட்டு கேட்க முடியாது.
அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியிருக்கலாம். ஏன் செய்யவில்லை? மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லை. மத்திய அரசை எதிர்த்தால் அடுத்த நாள் யாருக்கும் அமைச்சர் பதவி இருக்காது. இந்த விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து தமிழர்களை மொட்டையடித்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.