தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் பெ. மணியரசன் தஞ்சை வினோதகன் மருத்துவமனையிலிருந்து எழுதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
’’நான் கடந்த 10.6.2018 அன்று தாக்கப்பட்ட செய்தி குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பாக முதலமைச்சர் 11.6.2018 அன்று, சட்டப்பேரவையில் ஒரத்தநாடு தொகுதி உறுப்பினர் எம். இராமச்சந்திரன் கேட்ட கவன ஈர்ப்பு வினாவுக்கு முதல் அமைச்சர் அளித்த விடையில் விவரப் பிழைகள் இருக்கின்றன. எனவே எனது விளக்கத்தைத் தருகிறேன்.
எனது விளக்கம் என்பது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களிடம் நான் எழுத்து வடிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உள்ளது. இத்துடன் அந்த முதல் தகவல் அறிக்கை (FIR) நகலையும் இணைத்துள்ளேன்.
இன்று (12.6.2018) செய்தித்தாள்களில் வந்துள்ள முதல்வரின் சட்டப் பேரவை பதிலில், இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் நான் சென்ற இருசக்கர வாகனத்துடன் மோதியதில் நான் கீழே விழுந்தேன் என்றும் என் கையில் இருந்த கைப்பையை அந்த நபர்கள் பிடுங்கிச் சென்றதாகவும் இதே இரு நபர்கள் தாங்கள் வந்த அதே வாகனத்துடன் சென்று அந்தப் பகுதியில் வேறொருவரிடம் வழிப்பறிச்செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அந்த இரு நபர்கள் எங்கள் வாகனத்தின் மீது மோதவில்லை. அதனால் நான் கீழே விழவும் இல்லை. அடுத்து அந்த இரு நபர்கள் என் கையிலிருந்து எனது கைப்பையைப் பிடுங்கிச் செல்லவும் இல்லை.
அந்த இருநபர்கள் வண்டியை எங்கள் வண்டிக்கு இடதுபுறமாக நெருக்கமாக ஓட்டி வந்து, எங்கள் வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போதே அந்த வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் எனது இடது கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளினர். ஆனால் நான் சுதாரித்துக் கொண்டு வலது கையால் இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
மறுபடியும் அதேபோல் எனது இடது கையைப் பிடித்து அதே நபர் என்னைக் கீழே தள்ள முயன்றார். அப்போதும் நான் சமாளித்து இருக்கையில் இருத்திக் கொண்டேன். மூன்றாவது முறையாக அந்த நபர் மூர்க்கத்தனமாக எனது இடது கையை ஆவேசத்துடன் பிடித்து கீழே தள்ளி உருட்டி விட்டார்.
நான் அமர்ந்திருந்த வண்டியை ஓட்டிவந்த சீனிவாசன் அதன் பிறகே வண்டியை நிறுத்தி என்னைத் தூக்கிவிட்டார். நாங்கள் நேரடியாக அருகில் உள்ள தஞ்சை தெற்குக் காவல் நிலைய சென்று புகார் செய்தோம். அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனையில் சேரச்சொன்னார்கள். அங்கிருந்து புறப்பட்டு வினோதகன் மருத்துவமனையில் சேர்ந்தேன்.
வினோதகன் மருத்துவமனைக்கு வந்த பின்தான் என் கைப்பை என்ன ஆயிற்று என்ற யோசனையே எனக்கு வந்தது. அருகில் இருந்த தோழர்களிடம் சம்பவம் நடந்த இடத்தில் கைப்பை கிடக்கிறதா என்று பாருங்கள் என்று அனுப்பினேன். அவர்கள் பார்த்து வந்து அங்கு கைப்பை இல்லை என்றார்கள்.
எனவேதான் காவல் நிலையத்தில் நான் அளித்த எழுத்து வடிவிலான புகாரில் என் கைப் பையைக் காணவில்லை என்று எழுதிக் கொடுத்தேன்.
அந்தக் கைப்பையை என்னைத் தாக்கியவர்களும் எடுத்திருக்கலாம். அல்லது அவர்கள் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற பின் அப்பகுதியில் வந்த யாரோ ஒருவரும் எடுத்திருக்கலாம். ஆனால் என் கையிலிருந்து என் கைப் பையை யாரும் பிடுங்கவில்லை. என்கைப் பையை வாகனத்தை ஓட்டி வந்த சீனிவாசனுக்கும் எனக்கும் இடையில் இருக்கையில் (சீட்டில்) வைத்திருந்தேன்.
அந்த இருவரும் என்னைக் கொலை செய்ய வந்தவர்கள் என்று நான் கூறியதாக சில ஏடுகளில் செய்தி வந்துள்ளது. அவ்வாறு நான் யாரிடமும் கூறவில்லை.
எனக்கு ஆபத்து உண்டாக்கும் கெட்ட உள்நோக்கத்துடன் அவர்கள் என்னைத் தாக்கியதாக மட்டுமே கூறினேன்.
நான் ஊகிப்பது, அரசியல் மற்றும் இயக்கச் செயல்பாடுகளில் எனக்கு எதிராக உள்ளோர் என்னை மிரட்டி அச்சுறுத்துவதற்காகவும், இதன் மூலம் மற்ற களப்போராளிகளையும், அச்சுறுத்துவதற்காகவும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்பதாகும். உண்மைக் குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். தாக்குதலின் பின்புலத்தின் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.’’