






தமிழ்நாட்டில் குறைந்த மாணவர்களை கொண்ட அரசுப் பள்ளிகளில் மீண்டும் மாணவர்களை சேர்த்து பள்ளிகளை தொடர நினைக்காத அரசு. அந்தப் பள்ளிகளை மூடும் திட்டத்திற்கு வந்துவிட்டது. அரசின் முடிவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மூடப்படும் அரசுப் பள்ளிகளில் பொது நூலகம் திறக்கப்படும் என்றும், மூடப்படும் நிலையில் உள்ள பள்ளிகளில் மீண்டும் மாணவர்கள் சேர்க்கப்படும் பட்சத்தில், அந்த பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சுமார் 45 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு நூலகம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியது. அதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மற்றும் ஆவுடையார்கோயில் ஒன்றியம் சின்னபட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளும் மூடப்பட்டு நூலகம் திறக்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குளத்தூர் தொடக்கப்பள்ளி கடந்த ஆகஸ்ட் 9- ந் தேதி வெள்ளிக் கிழமை காலையுடன் அதிகாராப்பூர்வமாக மூடப்பட்டுவிட்டது. இந்த தகவல் அறிந்து பத்திரிகை நண்பருடன் குளத்தூர் கிராமத்திற்கு சென்று பள்ளியை பார்த்த பிறகு அப்பகுதி மக்களிடம் இது பற்றி பேசினோம். அப்போது அவர்களிடம் நாம், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் தான் பள்ளிகள் மூடப்படுகிறது. 1952 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளியை உங்கள் காலத்தில் மூடிவிட்டார்கள் என்றால் எதிர்கால சந்ததியினர் உங்களை குறை சொல்லமாட்டார்களா? இதேபோல கடந்த சில ஆண்டுகளில் அருகில் உள்ள அல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்னறிவிப்பு இல்லாமல் பூட்டப்பட்ட நிலையில் மீண்டும் மாணவர்களை சேர்த்து பள்ளி இயங்கி வருகிறது.
அதேபோல வல்லம்பக்காடு கிராமத்தில் அரசுப்பள்ளியை மூட உத்தரவிட்ட பிறகு கிராம மக்கள் இணைந்து தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புவதை நிறுத்திவிட்டனர். தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து அங்கன்வாடியை எல்.கே.ஜி. யூகே.ஜி வகுப்புகளை நடத்த சொந்த செலவில் செட் அமைத்து செயல்படுத்தி வருவதுடன் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்று அந்த கிராமத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் வருவதில்லை. அப்படி அந்த கிராமங்கள் செயல்படும் போது ஏன் உங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து தனியார் பள்ளிக்கு செய்யும் செலவுகளில் சிறிதளவு செய்து உங்கள் ஊர் பள்ளியை மீட்க கூடாது என்று நாம் பேசினோம்.
அனைத்தையும் கேட்ட கிராம பெரியவர்கள் முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் உடனடியாக கிராம கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக 10 குழந்தைகளை சேர்ப்போம். பள்ளியை மூட விட மாட்டோம் என்று சொன்னதுடன் கிராம கூட்டத்தையும் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினார்கள். கிராம மக்களின் தீர்மானத்தை கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவலாக கொடுத்தவர்கள். திங்கள் கிழமை தங்கள் குழந்தைகளுடன் பள்ளிக்கு வருவோம். எங்கள் குழந்தைகளை சேர்த்து பள்ளியை திறந்து செயல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வம், வட்டார கல்வி அலுவலர் முத்து குமார் ஆகியோர் மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர்களிடம் விசாரணை செய்த பிறகு பள்ளி திறக்கப்பட்டு 11 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் மீண்டும் தொடங்கியது.