திருவண்ணாமலை கார்த்திகை மாத தீபத்திருவிழாவை தீபம் ஏற்றுவதை நாடு முழுமைக்கும் நேரலை செய்தது தனியார் தொலைக்காட்சிகளில் ஜெயா டிவி மட்டுமே. அதன்பின்பே பல தொலைக்காட்சிகள் நேரலை (Live) தொடங்கின. கடந்த திமுக ஆட்சி காலத்தில் கூட ஜெயா டிவிக்கு நேரலைக்கு அனுமதி தந்துள்ளார்கள்.
இந்தாண்டு டிசம்பர் 11ந்தேதி மாலை 06.00 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னட செய்தி தொலைக்காட்சிகள் பல நேரலை செய்ய இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது. இதில் சில தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி தந்துள்ளது இந்து சமய அறநிலையத்துறை.
ஜெயா டிவி நேரலை செய்யவும் முதலில் அனுமதி தந்துள்ளார்கள். பின்னர் திடீரென அனுமதியில்லை எனச்சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அலுவலகத்தில் இருந்து அழைத்து, ஜெயா டிவிக்கு அனுமதி தராதீர்கள் எனச்சொன்னதாக கூறப்படுகிறது. அதனை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் அலுவலகம் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளும் கட்சி சார்பில் நடத்தப்படும் ஜெ தொலைக்காட்சி கோயிலுக்குள் இருந்து தீபம் ஏற்றுவதை நேரலை (Live) செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. அதேபோல் தீபம் ஏற்றுவதை மலைமேலிருந்து நேரலை செய்யவும் தந்துள்ளனர் அதிகாரிகள். கோயிலுக்குள் இருந்து தீபம் ஏற்றுவதை நேரலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வரும், அதே நேரத்தில் 2666 அடி உயரமுள்ள மலையில் உச்சியில் இருந்து நேரலை செய்வதற்கு தரையில் இருந்து மலை உச்சிக்கு கேபிள் போட்டு வருகின்றனர் ஜெ தொலைக்காட்சி குழுவினர்.
ஜெ தொலைக்காட்சிக்கு நேரலை செய்வதற்கான வசதி அவ்வளவாக கிடையாது. இதற்காக மற்றொரு பிரபல சேனலின் உதவியுடன் இந்த பணிகளை செய்து வருவதாக சேனல் வட்டாரங்கள் கூறுகின்றன.