நீட் தேர்வு முடிவினால் மாணவ, மாணவிகள் யாரும் தற்கொலை முடிவுக்கு போக வேண்டாம் என்றும் ‘ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்கிற பழமொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனர் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சி மாவட்டம், திருவள்ளூர் அவென்யூ பகுதி சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் கண்ணன் மகள் சுபஸ்ரீ என்கிற மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியவில்லை என்கிற மன அழுத்தத்தில் நேற்று இரவு 10.30 மணிக்கு தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தியை கேட்டு மிகவும் மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். மாணவ, மாணவிகள் இளம்பருவத்தில் இதுபோன்ற சோதனையான காலங்களில் தங்கள் மனதை திடத்துடன் வைத்துக்கொண்டு, மாற்று வழியை சிந்திக்கவேண்டுமே தவிர, தற்கொலை என்கிற முடிவுக்கு போகவேண்டாம். மேலும் அதிக மதிப்பெண் வாங்கவில்லையே என்று புண்படுத்தாமல் பெற்றோர்கள் மற்றும் உடனிருப்பவர்கள் இதுபோன்ற சோதனை காலங்களில் பிள்ளைகள் மனவேதனையோடு இருக்கும் பொழுது உறுதுணையாக இருந்து தைரியத்தை கொடுக்கவேண்டும்.
மேலும் நீட் தேர்வை பொறுத்தவரை தமிழக அரசு மிக முக்கிய பிரச்சனையாக எடுத்துகொண்டு மாணவர்களின் உயிரையும், எதிர்காலத்தையும் பாதுகாக்கின்ற வகையில் பயிற்சி மையங்களை அதிகமாக்குவதுடன், பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி கொடுப்பதன் மூலமே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்பதை தேமுதிக கருதுகிறது.
மேலும் மாணவர்கள் எல்லோரும் ஒரு இலக்கை நோக்கி செல்லவேண்டும் என்றே படிக்கின்றார்கள், ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கல்வி குளறுபடியால் அனைவரும் அந்த இலக்கை அடைய முடிவதில்லை, அதற்காக தங்களது இன்னுயிரை இழப்பதென்பது அவர்கள் குடும்பத்திற்கு பேரிழப்பாக்கும் என்பதை நினைக்கவேண்டும். ஆகவே வாழ்கையில் முன்னேறுவதற்கும், வாழ்வதற்கும் மாற்றுவழி உள்ளது என்பதை சிந்தித்து, ஒரு கதவு மூடினால், மறு கதவு திறக்கும் என்கிற பழமொழியை மனஉறுதியோடு ஏற்றுக்கொண்டு, இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல், எதிர்காலத்தை மாணவ, மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.