
திருவண்ணாமலையை சேர்ந்தவர் 28 வயதான தினேஷ். லாரி டிரைவராக உள்ளார். பெங்களுரூவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து சிங்கப்பூருக்கு அனுப்பப்பட இருந்த சரக்கு பொருட்களை பெங்களூருவில் இருந்து லாரியில் ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 22ந்தேதி இரவு புறப்பட்டுள்ளார் தினேஷ். பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் வேலூர் பள்ளிகொண்டா டோல்கேட்டை க்ராஸ் செய்துள்ளார். டோல்கேட் அருகே நின்றிருந்த இரண்டு பேர் தினேஷ் ஓட்டிவந்த லாரிக்கு கை காட்டி வேலூருக்கு முன்னாடி இறக்கி விட்டுடுங்க என லிப்ட் கேட்டுள்ளனர். இரவு நேரமாச்சே என தினேசும் இருவருக்கும் லிப்ட் தந்து லாரியின் முன் கேபினில் ஏற்றிக்கொண்டுள்ளார்.
லாரி 100 மீட்டர் தூரம் கடந்த உடனே, மர்ம நபர்கள் இரண்டு பேரும் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டிரைவரிடம் காட்டி, ஏதாவது செய்ய நினைச்சா குத்திடுவோம், நாங்க சொல்ற இடத்தில் வண்டியை நிறுத்து எனச்சொல்லி கொஞ்ச தூரத்தில் வீடுகள் இல்லாத பகுதியில் சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்தச்சொல்லியுள்ளனர். உயிருக்கு பயந்த தினேஷ்சும் லாரியை ஓரம் கட்டி நிறுத்தியுள்ளார். லாரியை நிறுத்தியதும், ஓட்டுநர் தினேஷை லாரிக்குள் வைத்து அடித்து உதைத்துள்ளனர். கத்தாமல் இருக்க ஒருவன் வாயை பொத்திக்கொண்டுள்ளான்.
வண்டியில் எவ்வளவு பணம் வச்சிருக்க எனக்கேட்டு அடிக்க 30 ஆயிரம் இருப்பதாக கூறியுள்ளார். அந்தப்பணத்தை தா என வாங்கிக்கொண்டு மீண்டும் அடித்து உதைத்துவிட்டு லாரியில் இருந்து இறங்கி இருட்டு பகுதியில் தப்பி ஓடியுள்ளனர்.
அவர்கள் சென்றதும் ரத்தம் சொட்ட சொட்ட டிரைவர் தினேஷ், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு பள்ளிக்கொண்டா காவல் நிலையத்திற்கு அங்கிருந்து நடந்தே வந்துள்ளார். ரத்தத்தோடு நள்ளிரவில் ஒருவர் காவல்நிலையத்துக்குள் நுழைந்ததும் பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். நடந்த சம்பவத்தை ஓட்டுநர் தினேஷ் தெரிவித்தவுடன் அவரிடம் புகார் எழுதி வாங்கிக்கொண்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.
சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு லாரியை போலீசார் கைப்பற்றினர். லாரி உரிமையாளருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், வழக்குப்பதிவு செய்து லிப்ட் கேட்டு தாக்கி பணம் பறித்த மர்ம நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை - பெங்களுரூ தங்க நற்கார சாலையில் நிமிடத்துக்கு 10 வாகனங்களுக்கு மேல் கடக்கும் அளவுக்கு எப்போதும் பரபரப்பான சாலையது. அந்த சாலையில் லிப்ட் கேட்டு ஏறி ஓட்டுநரை அடித்து உதைத்து பணத்தை பறித்து சென்றது வாகன ஓட்டிகளை அச்சப்படவைத்துள்ளது.