விசிகவின் வெல்லும் சனநாயகம் மாநாடு திருச்சி சிறுகனூரில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், ''இப்படை தோற்கின் எப்படி வெல்லும் என்ற அளவில் திருமாவளவனின் தொண்டர் படை கூடியுள்ளது. பட்டியலின மக்களை பாதுகாக்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு. தமிழகத்திற்கு உரம் சேர்க்கும் வகையில் நாங்கள் கொள்கை உணர்வோடு இணைந்து நிற்கிறோம். 33 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சபதம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி. எனக்கு தோளோடு தோளாக நிற்பவர் திருமாவளவன். வெல்லும் சனநாயகம் என்று சொன்னால் போதாது, நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். சர்வாதிகார பாஜக அரசு தூக்கி எறிவோம்.
சமூக நீதி, சமத்துவம் கொண்ட ஆட்சியை இந்தியா முழுவதும் அமைப்பதற்கான வெல்லும் சனநாயகம் மாநாட்டை திருமா நடத்தி வருகிறார். அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தோம். தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சி, பன்முகத்தன்மை ஆகியவற்றை காப்பாற்ற பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி இருக்காது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம், மாநிலங்கள் என்ற நிலையே இருக்காது'' என்றார்.