இலங்கைக்கு பொருட்களை அனுப்ப நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்டு குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு இலங்கைக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை அனுப்புவதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பொருட்களை அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து, இலங்கைக்கு அனுப்புவதற்கான பொருட்களைப் பேங்கிங் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்' என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும் பைகளில் தமிழ்நாடு மற்றும் மத்திய அரசின் முத்திரைகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த பொருட்கள் அனைத்தும் வரும் மே 22- ஆம் தேதிக்கு பிறகு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், இந்த பணிகளை ஒருங்கிணைப்பதற்காக நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறைச் செயலாளர் ஜெசிந்தா, உணவுப்பொருள் வழங்கல்துறை ஆணையர் பிரபாகர், ஆவின் மேலாண் இயக்குநர் சுப்பையன், மருந்து கொள்முதல் இயக்குநர் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் ஆகிய இரு இடங்களில் இருந்து பொருட்கள் அனுப்பப்படவுள்ளன.