பணியிடைமாற்றம் செய்தால் குழந்தைகளுக்கு சத்துணவில் விஷம் வைத்து கொன்றுவிடுவேன் என மிரட்டிய பெண் சத்துணவு அமைப்பாளர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வேலூரில், மக்கான் அம்பேத்கர் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தவர் சரஸ்வதி. இவர் பள்ளி குழந்தைகளுக்கு சரியாக சத்துணவு சமைப்பதில்லை, மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் என்ற பல குற்றசாட்டுகள் எழுந்துவந்த நிலையில் அவர் பணிமாற்றம் செய்யப்பட்டு அவர் இடத்தில் பவானி என்பவர் பணியில் அமர்த்தப்பட்டார். ஆனால் இந்த பணியிட மாற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாத சரஸ்வதி சத்துணவு கூடத்திற்கு சென்று புது பணியாளரான பவானியை மிரட்டியுள்ளார். அதுமட்டுமன்றி பணியிடை மாற்றத்தை பின்வாங்கவில்லை என்றால் சத்துணவில் விஷம் வைத்து மாணவர்களை கொன்றுவிடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் பிச்சாண்டி மற்றும் சத்துணவு அதிகாரி ரமேஷ் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு நடத்தி இதுபற்றி கேட்டறிந்து சம்பந்தப்பட்ட நபரான சரஸ்வதியை சஸ்பெண்ட் செய்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் விஷம் வைப்பேன் என சத்துணவு ஊழியர் கூறி பள்ளியில் பொதுமக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு தொற்றியது.