சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கவனத்தில் கொண்டு வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது கட்டுமானப் பணிகள் முடிந்து இன்று திறக்கப்பட்டுள்ளது. சுமார் 397 கோடி ரூபாய் மதிப்பில் 88 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
ஒரே நாளில் 2,310 பேருந்துகளை இயக்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓய்வெடுக்கும் அறை, மருத்துவ வசதி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு பயன்படும் வகையில் பேட்டரி கார்கள், 2 எஸ்கேலட்டர்க்ள், 6 லிப்ட் வசதிகள் உள்ளிட்டவைகளும் இந்த பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்துதான் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளும் இங்கிருந்துதான் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு வரவிரும்பும் பயணிகள் நேராக கோயம்பேடு வரமுடியாது. மாறாக கிளாம்பாக்கம் வந்த பின்னர் அங்கிருந்து மாநகர பேருந்தின் மூலம்தான் கோயம்பேடு வரமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.