கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீனிடம் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டதில் அதில் சில ரசாயன வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர் போன்ற நாட்டு வெடிகுண்டு தயார் செய்யக்கூடிய சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் நடந்த 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன் தினமான சனிக்கிழமை 22ம் தேதி நள்ளிரவில் ஜமேசா முபீன் தன் வீட்டிலிருந்து ஒரு மர்மப் பொருளை ஐந்து பேருடன் எடுத்து சென்றது அவர் வீட்டுப் பகுதியில் அமைந்துள்ள சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அந்த சி.சி.டி.வி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் ஜமேசா முபீனுடன் இருந்த ஐந்து பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உள்துறையில் உள்ள 60 சதவீத டி.ஒய்.எஸ்.பி.க்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அதனால் தான் உள்துறை டி.ஜி.பி. மற்றும் ஏ.டி.ஜி.பி.யின் மீது ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. லாவண்யா, கள்ளக்குறிச்சி, தென் தமிழ்நாட்டில் மதமாற்றம் வரை ஒரு என்.ஜி.ஓ.வும் மிஷனரியும் செய்யக்கூடிய வேலையை இன்று உள்துறை செய்து கொண்டிருக்கிறது. நம் உள்துறை தோற்றுவிட்டது. இந்தியாவிலேயே ஒரு மோசமான உள்துறை நம்மிடம் உள்ளது என முதலமைச்சர் ஒப்புக்கொள்ள இன்னும் எத்தனை நாட்கள் வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது.
கோவையில் சம்பவம் நடந்தவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றார். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் எந்தச் சலனமும் இன்றி, தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன.
அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும். ‘நீங்க 2000 வாங்கிக்குங்க, 3000 வாங்கிக்குங்க’ என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கேவலப்படுத்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரத்தவெறி கொண்ட சாத்தான்கள் ஓதும் வேதம் தமிழகத்தில் பலிக்கவே பலிக்காது” என்று பதிவிட்டுள்ளார்.