Skip to main content

''மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பேன்'' - ரவீந்திரநாத் பேட்டி

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

'I will cooperate if called for investigation again' - Rabindranath interview

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கோம்பை வனப்பகுதியின் அருகில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. செப்டம்பர் மாதம் 27ம் தேதி அந்த தோட்டத்தில் சிக்கிய இரண்டு வயது சிறுத்தைப் புலியை மீட்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டனர். வன பாதுகாப்பு அலுவலரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிய அந்த சிறுத்தைப் புலி மீண்டும் மறுதினம் அந்த மின் வேலியில் சிக்கிக் கொண்டது.

 

இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து அதே தோட்டத்தில் ஆடுகளுக்குத் தற்காலிகக் கிடை அமைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கம், நில உரிமையாளரை விட்டுவிட்டு தற்காலிகக் கிடை அமைத்தவரைக் கைது செய்வதா எனக் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வனத்துறை தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அப்பாவி மக்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்திருந்தது. வேலியில் சிக்கியது இரண்டு சிறுத்தைப் புலிகள் என்றும் ஒன்று மீட்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மற்றொன்று தான் உயிரிழந்து விட்டதாக வனத்துறையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு வனத்துறை ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தேனி சமதர்மபுரம் ரேஞ்சர் அலுவலகத்தில் உதவி வன காவலர் ஷர்மிலி முன்னிலையில் ஆஜரானார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின் அவர் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

அதன்பின் ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''யார் தோட்டத்தில் வனவிலங்குகள் இருந்தாலும் இதுபோன்ற நடவடிக்கை வனத்துறையினர் மேற்கொள்வார்கள். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பேன்'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்