திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் குத்தகை 2028ஆம் ஆண்டில் முடிவடைகிறது. இருப்பினும் குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் தன்னுடைய பணியை நிறுத்திக் கொள்வதாகத் தெரிவித்திருந்தது. இந்த தேயிலைத் தோட்ட நிறுவனத்தில் மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர்.
இத்தகைய சூழலில் தான் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என இதற்கான அறிவிப்பைத் தனியார் நிறுவனம் நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டது. அதே சமயம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், ‘மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளைச் செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் தொடர்ந்து வசிப்பது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (29.08.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஒரு தரப்பினரான புதிய தமிழகம் கட்சி சார்பில் வாதிடுகையில், “நீண்ட காலமாக வனத்தில் வசிப்பவர்களை வனவாசிகளாகக் கருதலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப்பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், “மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான இந்த வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பு பட்டியலிட உத்தரவிட்டுள்ளது.