தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது குமரி முதல் கோட்டை வரை நடை பயண பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவரது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து நிறைவேற்ற வேண்டிய பிரதமர் மோடி பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் மூலம் அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று (08.03.2018) திருச்செந்துர் முருகன் கோவிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த அய்யாகண்ணு மீது தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி தலைவர் நெல்லையம்மாள் தாக்குதல் நடத்தியது வண்மையாக கண்டிக்கதக்கது.
இத்தாக்குதலானது பாஜக தலைமை திட்டமிட்டு ஒரு பெண்ணை விட்டு தாக்குதல் நடத்தியிருப்பது வெட்ககேடானதும் பிற்போக்கு தனமானது ஆகும். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நாட்டை ஆளும் கட்சிக்கு இல்லையே என்பது வேதனையளிக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளை அவமானப்படுத்தும் செயலாகும்.
பா.ஜ.க தொடர்ந்து அமைதியான தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது கீழ்தரமான செயல் ஆகும்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அய்யாக்கண்ணு வயது முதிர்வை கூட பொருட்படுத்தாமல் பொது இடத்தில் ஆன்மீக தளத்தில் தாக்குதல் நடத்திய நெல்லையம்மாள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டும்.
இதனை தூண்டியவர்களையும் நாட்டிற்கு அடையாள படுத்த வேண்டும்.
தமிழகத்தில் போராளிகள் மீது தாக்குதல் நடத்த துவங்கியிருப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் விவசாயிகள் ஒன்றினைந்து எதிர்தாக்குதல்களில் ஈடுபடுவோம் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு சார்பில் எச்சரிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.