தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான எச்.வசந்தகுமார் சென்னையில் காலமானார்.
எச்.வசந்தகுமார் மறைவு குறித்து நம்மிடம் பேசிய திருவாடானை எம்.எல்.ஏ.,வும், நடிகருமான கருணாஸ், வாழ்க்கையில் ஏழ்மையான இடத்தில் இருந்து கடுமையான உழைப்பால் உயர்ந்தவர். வி.ஜி.பி.,யில் அவர் பணியாற்றிய காலத்தில் இருந்தே எனக்கு அவரை தெரியும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் அவருடைய வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக்கொண்டு ஜெயிக்க வேண்டும்.
"உண்மை, உழைப்பு, உயர்வு" என வசந்த் அன் கோ விளம்பரத்தை மனதில் வைத்துதான் அம்பாசமுத்திரத்தில் அம்பானி என்ற படத்தில் நான் சேரில் அமர்ந்து சுற்றுவதுபோல் ஒரு காட்சி வைத்திருப்போம். வசந்த்குமார் அவர்களை மனதில் வைத்துதான் அந்தக் காட்சியை அமைத்தோம். சட்டமன்றத்தில் மிக எளிமையான நடையில் சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிக்கும்படி தனது தொகுதி சார்ந்த பிரச்சனைகளைப் பேசுவார். கோரிக்கைகளை முன் வைப்பார்.
அவரது பேச்சை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் அவர் மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேசுவார். தன்னுடைய வாழ்க்கை அனுபவம் தன்னோடு முடிந்துவிடக் கூடாது. தன்னுடைய அனுபவம், பேச்சுகள் மூலமாக ஒரு வசந்தகுமார் உருவாக மாட்டானா என்று நினைப்பார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.