விசிக சார்பில் சென்னை வேப்பேரியில் விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு பெரியார் ஒளி விருதும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். விழா மேடையில் அவர் பேசுகையில், “1989ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக் கல்லூரிக்கு 'டாக்டர். அம்பேத்கர் சட்டக் கல்லூரி' என்று பெயர் சூட்டியவர் கலைஞர். 1997ஆம் ஆண்டு சென்னையில் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவரும் கலைஞர்தான். மராட்டியத்தைவிட தமிழ்நாட்டில் அம்பேத்கரின் புகழ் பரவ காரணமே திராவிட இயக்கம்தான். அம்பேத்கரின் 'சாதியை ஒழிக்கக் கூடிய வழி' என்ற நூலை 1936ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட இயக்கம் திராவிட இயக்கம்.
சுயமரியாதை இயக்க மாநாட்டுக்கு அம்பேத்கரை அழைத்து அவர் வர இயலாத நிலையில், எம். ஜெயகர் என்பவரை அனுப்பிவைத்தார் அம்பேத்கர். அந்த அளவிற்கு அம்பேத்கரை விதைத்தது திராவிட இயக்கம்தான் என்பதை மறந்துவிட முடியாது. 1987ஆம் ஆண்டு 'ஒரே ரத்தம்' என்ற திரைப்படத்தில் நான் கவுரவ வேடத்தில் நடித்தேன். அந்தத் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் கலைஞர். மாணவர்கள் இடையிலும் ஜாதி பூசல் இருக்கிறதே என்ற வேதனையில் கலைஞர் அந்தக் காவியத்தைத் தீட்டினார். கிராமத்திலிருந்து நகரத்திற்குப் படிக்கவந்து, படிப்பை முடித்துவிட்டு கிராமத்திற்குச் சீர்திருத்தவாதியாக செல்லக்கூடிய நந்தகுமார் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தேன். பண்ணையாருடைய ஆதிக்கத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் புரட்சியாளராக நான் வருவேன் அந்த திரைப்படத்தில். இறுதியாக நான் தாக்கப்படும்போது 'ஒரு போராளியின் பயணம் இது.... அவன் போராடி பெற்ற பரிசு இது...' என்ற பாடல் வரும். அந்தப் பாடலை எழுதியதும் கலைஞர்தான். அம்பேத்கர் சுடர் விருது பெறும்போது அதைத்தான் நினைத்துப் பார்க்கிறேன்'' என்றார்.