திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1989ம் ஆண்டு முதல் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினராக இருப்பவர் ஐ.பெரியசாமி திமுக ஆட்சியின்போது வீட்டுவசதி, சிறைத்துறை, பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த்துறை மற்றும் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 1 லட்சத்து 43 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்ற பின்பு அவருக்கு வருவாய் மற்றும் மின்சாரத்துறை கிடைக்கும் என ஆத்தூர் தொகுதி மக்கள் எதிர்பார்த்தனர். கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு செய்த பின்பு திமுக தொண்டர்கள் மட்டுமின்றி ஆத்தூர் தொகுதி மக்களே மிகுந்த சோகத்தில் கடந்த 17மாதங்களாக இருந்து வந்தனர். கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ஐ.பெரியசாமி இந்தியாவே போற்றும் அளவிற்கு தமிழக கூட்டுறவுத்துறையை உயர்த்தியதோடு இந்தியாவில் குறிப்பாக 2வது தேசிய கூட்டுறவு ஆராய்ச்சி நிலையத்தைக் கொடைக்கானல் மன்னவனூரில் கொண்டுவந்ததோடு ஆத்தூர் தொகுதியில் தமிழகத்தில் முதன்முதலாக ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைக் கொண்டு வந்தார்.
இதுதவிர கூட்டுறவுத்துறை சார்பாக வழங்கப்பட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளையும் 100 சதவீதம் செயல்படுத்தியதால் தற்போது அமைச்சரவை மாற்றத்தின்போது அவருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இச்செய்தியைக் கேள்விப்பட்டவுடன் ஆத்தூர் தொகுதி திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் முருநெல்லிக்கோட்டையில் மருத்துவ முகாமில் இருந்த ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி மருத்துவ முகாமிற்கு வந்த அனைத்து பொதுமக்களுக்கும், மருத்துவர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
அதுபோல் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக சின்னாளபட்டி காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சிலை மற்றும் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமையில் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தியதோடு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். அதேபோல் திண்டுக்கல் மாநகரில் உள்ள கிழக்குப் பகுதி செயலாளர் ராஜேந்திர குமார் வடக்கு பகுதி செயலாளர் ஜானகிராமன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் நகரில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.