திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஜி.டி.என். சாலையில் அமைக்கப்பட்ட தெரு விளக்குகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, தலைமை தாங்கினார். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா, ஆணையர் மகேஸ்வரி மற்றும் 17 ஆவது வார்டு மாநகரக் கவுன்சிலர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழகத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டில் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்திடவும், குடிநீர் வசதி முழுமையாக வழங்குவதற்கும் ஒரு பெரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாகப் பொதுமக்களுக்கு முழு வசதிகளுடனும், பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடப் பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார் .
தமிழகம் முழுவதும் 10,000 கி.மீட்டர் அளவிற்குச் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவிலான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாநகராட்சியில் ஜிடிஎன் சாலை மிகவும் பிரதான சாலை மட்டுமின்றி கடந்த 25 ஆண்டுகளாகத் தினமும் அதிகளவிலான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சாலை கடந்த 2009-10 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இந்த சாலையில் மின் விளக்கு வசதிகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இந்த மின் விளக்கு வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழக முதல்வர் தேர்தல் காலங்களில் அறிவித்த வாக்குறுதியினைச் செயல்படுத்தும் விதமாகச் செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்துவதற்குப் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
இந்த விழாவில் ஆத்தூர் நடராஜன், அம்பை ரவி, மாநகர பகுதிச் செயலாளர்களான ராஜேந்திரகுமார், ஜானகிராமன், மாநகரக் கவுன்சிலர்களான ஜான்கென்னடி, அருள்வாணி மற்றும் சரவணன் உட்படக் கட்சிப் பொறுப்பாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.