திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (10.12.2021) அன்று புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன் வந்திருந்தார். அப்போது ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், ஜாகீர் உசேனை கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுத்தார். ரங்கராஜன், ஜாகீர் உசேனை தடுக்கும்போது, “இந்துக்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி உள்ளது. நீங்கள் எப்படி வரலாம்” என்று கூறி தடுத்து நிறுத்தியிருக்கிறார்.
‘கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்று தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் நூற்றுக்கணக்கான பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஒரு கலைஞனை இப்படி அவமானப்படுத்துவதா? குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பலமுறை சென்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திய ஜாகிர் உசேனை உள்ளே அனுமதிக்காமல் தடுப்பதை எப்படி ஏற்பது” என்று ஜாகிர் ஹுசேனின் நண்பர் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்ததாவது, “கோவில் நிர்வாகம் யாரையும் கோவிலுக்குள் செல்ல முடியாது என்று மறுக்கவில்லை. வெளிநாடுகளிலிருந்து பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கென்று சில நிபந்தனைகளுடன் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ரங்கராஜன், பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேனை தடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளோம்” என்றார்.
ஸ்ரீரங்கம் கோவில் சார்ந்து பல்வேறு வழக்குகளைத் தொடுத்து அதனை சந்தித்துவருபவர் ரங்கராஜன் நரசிம்மன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது மற்றும் சமூக நல்லிணக்க விருது பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்துவருகிறார். அவர் திருச்சி காவல்துறை ஆணையரிடம் இதுகுறித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘பிறப்பால் இஸ்லாமியனாக இருந்தாலும், வாழ்வில் ஒரு வைணவனாகவே வாழ்ந்துவரும் நான், பல வைணவத் திருத்தலங்களின் திருப்பணிகளை செய்திருக்கிறேன். நேற்று (10ஆம் தேதி) நண்பகல் அமைதியான முறையில் திருவரங்கம் அரங்கநாதரை தரிசிக்க கோயிலுக்குள் சென்ற என்னை ரங்கராஜன் நரசிம்மன் எனும் நபரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு மத, சாதி அடையாளத்தைக் கொச்சையாக, தகாத சொற்களால் பேசி ஆலயத்துக்குள் நுழையவிடாமல் நெட்டித்தள்ளி வெளியேற்றப்பட்டேன். சம்பவம் நடந்தபோது அங்கு பல பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் இருந்தனர். சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியிருக்கிறது. இதுநாள்வரை திருவரங்கக் கோயில் நிர்வாகிகளும், கோயில் அர்ச்சகர்களும் என் பிறப்பின் அடிப்படையில் எனக்கு அனுமதி மறுத்ததில்லை.
ஆனால், சம்பவம் நடந்தபோது யாரும் அவரைத் தடுக்கவும் இயலவில்லை. எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். காரணம், என்னை மதத்தின் பெயரால் மிகவும் சத்தம் போட்டு கூட்டத்தில் பிரிவினையை ஏற்படுத்தியதே ஆகும். அவமானத்தால் கூனிக் குறுகி எம்பெருமான் அரங்கநாதனின் கோயிலிலிருந்து வெளியேறினேன். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்றிரவு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற்று திரும்பினேன். எனக்கெதிராக ஒரு தீண்டாமையை நிகழ்த்தி, இந்திய இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்துக்கும் எதிராக செயல்பட்டதற்கு சம்பந்தப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனை உடனடியாகக் கைதுசெய்து விசாரித்து, உரிய நீதி வழங்கிட வேண்டும்’ என அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.