ரத யாத்திரையில் ஆன்மீக சார்ந்த நோக்கம் இருந்தாலும், அது மத கலவரத்தில் போய் முடியக்கூடாது என நினைக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 10 நாட்களாக தனது ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்.
என் ஆன்மீக பயணம் என்பது எனது ரொம்ப நாள் ஆசை இன்று நிறைவேறி இருக்கிறது. இப்பொழுது மனது மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது. திரைத்துறை வேலைநிறுத்தம் செய்யக்கூடாது என அடிக்கடி சொல்லிவருகிறேன், பிரச்சனைகளை மிக விரைவாக முடித்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என வேண்டிகேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனக்கூட்டம் இன்னும் முடியவில்லை. இன்னும் பதினாறு மாவட்டங்கள் பாக்கியுள்ளது. விரைவில் அதற்கான வேலைகள் துவங்கவுள்ளேன். பெரியார் சிலை உடைக்கப்பட்டது மிகவும் கண்டிக்கப்படக்கூடிய செயல் என நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் காட்டுமிராண்டிகள் இப்போதும் அதுவே என் கருத்து.
தமிழ்நாடு ஒரு மதசார்பற்ற மாநிலம் எனவே இங்கு மதக்கலவரம் வரக்கூடாது என நினைக்கிறேன் வந்தாலும் அரசாங்கம் அதுபோன்ற கலவரம் வராமல் பாதுகாக்கும் என நம்புகிறேன். ரத யாத்திரையில் ஆன்மீக சார்ந்த நோக்கம் இருந்தாலும் அது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
பாரதிய ஜனதா எனக்கு பின்னாடி இருக்கிறது என்று பலர் பரப்பிவருகிறார்கள் எனக்குப்பின்னாடி இருப்பது கடவுளும், மக்களும் தான். நான் ஏற்கனவே டிசம்பர் 31 அன்றே சொல்லியுள்ளேன். நான் இன்னும் அரசியல் குளத்தில் இறங்கவில்லை இறங்கிய பின் கண்டிப்பாக நீந்தியாக வேண்டும். எனவே அதுவரை நடக்கும் அன்றாட விஷயங்களுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று இன்னும் எவ்வளவு முறை சொல்வதென்று எனக்கே தெரியவில்லை.
ஏப்ரல் மாதம் கட்சி பெயர், கட்சிக்கொடி அறிவிக்கப்போகிறேன் என்று வெளிவந்த செய்திகள் உண்மையல்ல. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் மத்திய அரசு அமைக்க வேண்டும். மாநில அரசு அதற்கான வழிவகை செய்யவேண்டும். கமல் கூறிய குற்றச்சாட்டுக்கு கருத்துக்கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.