கோவை-பாலக்காடு நெடுஞ்சாலைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளியை கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.
கடந்த நவம்பர் 18 ஆம் தேதி ஆந்திராவில் இருந்து கோவை வழியாக பாலக்காடு சென்ற லாரி வேலந்தாவளம் அருகே வரும் போது சிறை பிடித்த மர்ம கும்பல் லாரி ஓட்டினரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் , செல்லிடப்பேசியை பறித்து சென்றது. அப்போது தப்பி ஓட முயற்ற அக்கும்பலை சேர்ந்த அனஸ்பாபு (29) என்பவரை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து தப்பி சென்ற 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பிடிப்பட்ட அனஸ்பாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நெடுஞ்சாலையில் இதே போல் இந்த கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும், கொள்ளைக்கு கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஹக்கீம் (32) மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து மதுக்கரை காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில், உதவி ஆய்வாளர் சாஜகான், தலைமை காவலர் ரவிசங்கர், ஜிவானந்தம் அடங்கிய தனிப்படை கேரளா விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த ஹக்கீமை கைது செய்த போலீசார், கோவை அழைத்து வந்து மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஹக்கீம் மீது தமிழகத்தில் பல வழக்குகள் நிழுவையில் உள்ளது.
அவனிடம் நடத்திய விசாரணையில், நெடுஞ்சாலைகளில் குட்கா பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளை மட்டும் குறி வைத்து, கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாகவும், குட்கா பொருட்களை கொள்ளையடிக்கும் போது காவல் நிலையத்திற்கு புகார் வராது என்பதால் அதை தொடர்ந்து செய்ததாகவும், அவ்வாறு கொள்ளையடிக்கும் குட்காவை வேறு பகுதிக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்தது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் அரூரில் அரிசி லோடு ஏற்றி சென்ற லாரியை சிறை பிடித்து ஓட்டுநரை தாக்கி விட்டு 90 டன் அரிசியுடன் லாரியை கொள்ளையடித்து சென்றதும், இதே போல் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.