!['I don't like to live, I'm leaving everyone' - a letter written by the police](http://image.nakkheeran.in/cdn/farfuture/umToxvogBU1u0r8EAp8Nz5vdoJJlwBFvRaAgjVhIarY/1671212703/sites/default/files/inline-images/N222554.jpg)
எனக்கு வாழப் பிடிக்கவில்லை மிகுந்த மனவேதனையுடன், மன அழுத்தத்துடன் இருப்பதால் அனைவரையும் விட்டுப் பிரிந்து செல்கிறேன். என்னுடைய மரணத்திற்கு நானே காரணம்; வேறு யாரும் இல்லை. என்று எழுதிய கடிதத்தின் கடைசியில் டி.தமிழ்செல்வன் என்று கையெழுத்திட்ட இளம் காவலரின் மரண வாக்குமூல கடிதம் அனைவரையும் கலங்க வைத்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கீழ்பாதி தியாகராஜன் மகன் தமிழ்செல்வன் (வயது 30). வறுமையான குடும்பத்தில் பிறந்து பொறியியல் பட்டப் படிப்பை முடித்த கையோடு, காவல்துறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, கடந்த 2018 டிசம்பர் 4 ந் தேதி பணியில் சேர்ந்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வடகாடு கிராமத்தைச் சேர்ந்த அபினா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
நேற்று மாலை வரை கீரமங்கலம் காவல் சரகம் நெய்வத்தளியில் ஒரு கோயில் மண்டலாபிஷேக நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்., பணி முடிந்து இரவு சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை காலை மீண்டும் பணிக்கு வர வேண்டியவர் வரவில்லை. இந்த நிலையில் இரவில் தூங்கச் சென்றவர் வெளியே வரவில்லையே என வீட்டில் இருந்தவர்கள் தமிழ்செல்வன் தூங்கிய அறைக்குச் சென்று பார்த்தபோது பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளியபடி கிடந்துள்ளார்.
!['I don't like to live, I'm leaving everyone' - a letter written by the police](http://image.nakkheeran.in/cdn/farfuture/MD9cqRHQ66RayzzxT1kMq0Fa_YyiWl-ePZPHf_e2VOA/1671212722/sites/default/files/inline-images/N222555.jpg)
அக்கம்பக்கத்தினர் காவலர் தமிழ்செல்வனை அறந்தாங்கி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளார். அதன் பிறகு பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ்குமார் விசாரணை செய்து வருகிறார். போலீசார் விசாரணையில் தனது சகோதரர் வெளிநாடு செல்ல கடன் வாங்கியது சம்பந்தமாக கடன் திருப்பி கொடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் கடன் சுமையால் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
'வாழ வேண்டிய வயதில் இப்படி மரணத்தைத் தழுவிக் கொண்டாரே' என்று உறவினர்கள் கதறி அழுவது பார்ப்போரையும் கலங்க வைத்துள்ளது.