Skip to main content

‘எந்தத் தவறும் செய்யாத எனக்கு....?’ -கண்ணீருடன் கர்ப்பிணித்தாய் புகார்!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018

அரசு மருத்துவமனைகளின் தவறால், எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் கர்ப்பிணி முத்து, தனக்கு தீங்கிழைத்த அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சாத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

blood


அந்த மனுவில் ‘எனக்கு கடந்த 21-8-2015 –ஆம் தேதி, சாத்தூர் முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. எங்களுக்குக் காளீஸ்வரி (வயது 3) என்ற மூத்த மகள் இருக்கிறாள். இந்நிலையில் நான் கர்ப்பமானேன். கர்ப்பமான நாளிலிருந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடர் சோதனை எடுத்து வந்தேன். கடந்த 3-ஆம் தேதி, என்னைப் பரிசோதித்த அரசு மருத்துவமனை ட்யூட்டி பெண் டாக்டர் எனக்கு ரத்தம் குறைவாக உள்ளதால், ரத்தம் செலுத்த வேண்டும் என்று கூறினார். என்னுடன் வந்த என் கணவர் தங்கப்பாண்டியிடம், சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்தம் வாங்கிவர கடிதம் தந்தார். என் கணவர் அந்தக் கடிதத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்தம் வாங்கி வந்தார். அன்றைய தினமே எனக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. ரத்தம் செலுத்திய 3-ஆம் தேதியிலிருந்தே குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. அதனை மருத்துவரிடமும் செவிலியர்களிடமும் சொன்னேன். அதற்கு மருத்துவரும், செவிலியர்களும் ரத்தம் செலுத்தப்பட்டால், சிலருக்கு காய்ச்சல் வரும். போகப்போக சரியாகிவிடும் என்றார்கள். 

 

blood


கடந்த 5-ஆம் தேதி, உள்நோயாளியாக இருந்த என்னை ட்யூட்டி டாக்டர் டிஸ்சார்ஜ் செய்தார். வீட்டிற்குச் சென்றதும் எனக்கு காய்ச்சல் அதிகமானது. குளிர் அதிகமானதால், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. என்னால் தாங்க முடியவில்லை. எனவே, 17-ஆம் தேதி மீண்டும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அப்போது அங்கிருந்த ட்யூட்டி டாக்டர் மாதிரி ரத்தம் எடுக்கச் சொன்னார். அதேபோல் எடுத்து சோதித்தார்கள். அப்போதே எனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்ட விபரம் டாக்டருக்குத் தெரிந்துவிட்டது. ஆனால், என்னிடம் சொல்லவில்லை. மாறாக, 18-ஆம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு என் ரத்தத்தை எடுத்து சோதித்த டாக்டர், எனக்கு எச்.ஐ.வி. நோய் உள்ளது என்ற விபரத்தைக் கூறினார். எனக்கு அதிர்ச்சியும், கடுமையான மன உளைச்சலும் ஏற்பட்டது. எந்தத் தவறும் செய்யாத எனக்கு எச்.ஐ.வி. நோய் ஏற்பட, சாத்தூர் அரசு மருத்துவமனையில் எனக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள்தான் காரணம். எனக்கு இந்த நோய் ஏற்பட, அரசு டாக்டர்கள் மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனையும்தான் காரணம். அரசு டாக்டரின் கவனக்குறைவு எனக்கு இந்த நோய் ஏற்பட மூலகாரணம் ஆகும். அதனால், எனக்கு உடலில் அதிகவலி ஏற்பட்டது. என் உயிருக்கும் என் வயிற்றில் உள்ள 9 மாத குழந்தைக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டார்கள். அரசு டாக்டரின் கவனக்குறைவினால், நான் நிரந்தர எச்.ஐ.வி. நோயாளியாக ஆக்கப்பட்டுள்ளேன். சமூகத்தில் என்னைப்பற்றி தவறுதலான எண்ணத்தை ஏற்படுத்தி, என்னைக் களங்கப்படுத்திவிட்டார்கள். நான் பட்ட மானநஷ்டத்திற்கு அரசு டாக்டர்களும், செவிலியர்களும்தான் காரணம். எனது குடும்பமே மிகவும் மனஉளைச்சலும், மன வேதனையும் அடைந்து, அவமானப்பட்டு நிற்கிறது. 

 

blood

 

ஆகையால், சார்பு ஆய்வாளர் அவர்கள் எனக்கு எச்.ஐ.வி. வருவதற்குக் காரணமான, எனக்கு வைத்தியம் பார்த்த ட்யூட்டி டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ரத்த வங்கி ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

blood

 

குமுறலுடன் தனது மனுவை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடமும் முத்து அளித்திருக்கும் நிலையில்,  இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்துள்ளது. உரிய இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் ஆணையத் தலைவர் நீதிபதி ஜெயச்சந்திரன். 

 

எச்.ஐ.வி. பாதிப்பையும், வயிற்றில் ஒன்பது மாதக் குழந்தையையும் சுமந்தபடி, சட்ட ரீதியான நியாயம் கிடைப்பதற்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் முத்து!

 


 

சார்ந்த செய்திகள்