தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உடன் தங்குபவர்கள், நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள், செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர்.
இவர்களுக்கான உணவு மற்றும் சிற்றுண்டி வசதிக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டீன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மருத்துவமனை வளாகத்தில் கேண்டீன் அமைத்துள்ள மாரிச்சாமி என்பவர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது சம்பந்தமாக நாம் விசாரித்த போது, ‘இங்கு கேண்டீன்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்வதற்காக மூன்று இணைப்புகள் உள்ளது. அதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தன்னிச்சையாகத் துண்டித்ததாகவும், துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டுமானால் தனக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கேண்டீன் உரிமையாளர் மாரிச்சாமி முதல் தவணையாக ரூபாய் 6.5 லட்சம் மற்றும் இரண்டாவது தவணையாக ரூபாய் 3.5 லட்சம் வழங்குவதாக தானே வீடியோவில் கூறி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் வழங்கும் காட்சிகள் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
அதேபோல், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வரின் குடியிருப்புக்குச் சென்றும் மாரிச்சாமி பணம் வழங்கி உள்ளார். அது தொடர்பான காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
2015ல் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக இருந்த மீனாட்சி சுந்தரத்திற்கு அப்போது, மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. பிறகு அவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பணி இடமாற்றம் பெற்று அங்கு பணியில் சேர்ந்தார். அதே காலகட்டத்தில், அன்றைய அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். அதன்பின் மீண்டும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக வந்தார்.
இதன் காரணமாகவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியபோது, மீனாட்சி சுந்தரம் வீட்டிலும் சோதனை நடைபெற்றது’ என்கிறார்கள்.
இது சம்பந்தமாக மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் கேட்டபோது, “விதிமுறைகளை மீறி கேண்டீனுக்கு அதிகமான தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தார். அதை நான் தடுத்தேன். அதேபோல் கூடுதலான இடங்களையும் ஆக்கிரமித்திருக்கிறார். அதையும் தடுத்தேன். அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் என்னைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பணம் கொடுப்பதாக வீட்டுக்கு வந்தார். நான் அவரைத் திருப்பி அனுப்பி விட்டேன்.
அது போல் ஆபிஸ்க்கு வந்து பணத்தை டேபிளில் வைத்தார். நான் உடனே அதை எடுக்கச் சொல்லிவிட்டேனே தவிர அவரிடம் நான் பணம் வாங்கவில்லை. இதையெல்லாம் அவர் மறைமுகமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இதைப் பற்றி உயர் அதிகாரிகளுக்கு நானும் தகவல் அனுப்பி இருக்கிறேன்” என்று கூறினார்.
இந்த நிலையில், கல்லூரி முதல்வர் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருவதைக் கண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அதிரடியாக மீனாட்சி சுந்தரத்தை தற்காலிகப் பணி நீக்கம் செய்தார். இது சுகாதாரத் துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.