மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குதல், அரசாணை வெளியிடுதல், சிறப்பு அதிகாரிகள் நியமித்தல் எனப் பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்ப விநியோகம் ஆகியவை ரேசன் கடைகள் மூலமாக, நேரடியாக விண்ணப்பதார்களின் வீடுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார். அப்போது, முகாமிற்கு வந்திருந்த பெண்களிடம் விபரங்களைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, குடும்பத்தலைவிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள், தன்னார்வலர்கள் மூலம் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த முகாமில் சுமார் 1500 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். முகாமிற்கு வந்திருந்த மகளிரிடம் இந்தத் திட்டம் குறித்துக் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “ஏழை எளிய மகளிரைக் கொண்டு முதன்முதலில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தர்மபுரியில் தொடங்கப்பட்டது. கலைஞர் அன்று விதைத்த விதைதான் இன்றைக்கு மாபெரும் திட்டமாக தமிழ்நாடு முழுவதும் தழைத்து வளர்ந்துள்ளது. இதன்மூலம் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு கணக்கெடுத்துப் பார்த்தால் 4 லட்சத்து 57 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் 51 லட்சத்து 46 ஆயிரம் மகளிர் பங்குபெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 3 லட்சத்து 90 ஆயிரத்து 633 குழுக்களுக்கு 25 ஆயிரத்து 642 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 - 2011 கால கட்டத்தில் நான் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தபோது பல்லாயிரக்கணக்கான சுயஉதவிக்குழுக்களின் உறுப்பினர்களையும், குழுக்களையும் உருவாக்கினேன். அவர்களுக்கெல்லாம் கடனுதவிகளை எல்லாம் பலமணிநேரம் நின்றுகொண்டே வழங்கினேன். அதுபோன்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு நிகழ்ச்சிக்காகச் செல்லும்போது, அதில் மகளிர் சுயஉதவிக்குழுக்களைக் கட்டாயம் பங்கேற்க வைத்தேன். அவர்கள் அனைவருக்கும் சுழல்நிதி, வங்கிக்கடன் என மானியமாக வழங்கினோம். இவ்வாறு வழங்கப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேர், பல மாவட்டங்களில் 7 ஆயிரம், 8 ஆயிரம், 10 ஆயிரம் பேர் எனக் கலந்துகொண்டனர். அத்தனை பேருக்கும் நிதியுதவியைத் தந்துவிட்டுதான், அந்த நிகழ்ச்சியில் இருந்து சென்றிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது போன்று நிழச்சியில் நிதியுதவி வழங்கிக்கொண்டிருந்தபோது, வயதான தாய் ஒருவர் மேடைக்கு வந்தார். அவர் என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு நாங்கள் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறோம். நீங்கள் கூப்பிடும் போதுதான் மேடைக்கு வந்து வாங்கிச் செல்கிறோம். ஆனால், நீங்கள் வந்ததில் இருந்து நின்றுகொண்டே கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே? உங்களுடைய கால்கள் வலிக்கவில்லையா? உட்கார்ந்து கொண்டு கொடுங்கள் எனக் கேட்டார். அதற்கு நான் நின்றுகொண்டு கொடுக்கும்போது கால்கள் வலிக்கவில்லை. அதற்குக் காரணம் நிதியுதவியைப் பார்க்கும்போது உங்களின் முக மலர்ச்சியைப் பார்க்கிறேன். அதில் என் கால்வலி பறந்துபோய்விடுகிறது என்று சொன்னேன்.
மகளிர் சுயஉதவிக்குழு திட்டத்தை, எந்த உணர்வோடு கலைஞர் தாய்மார்களுக்கு உருவாக்கினார்களோ, அந்த வகையில் சென்றடைய வேண்டும். பயனடைய வேண்டும். இந்தத் திட்டம் இன்று கம்பீரமாக வளர்ந்து வந்துள்ளதைக் கண்டு பெருமைப்படுகிறேன். அந்தச் சிறப்பான திட்டத்திற்கு விதை போட்ட மண்தான் இந்தத் தருமபுரி மண் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.