தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது எப்படி என்பது தொடர்பாக 11 பேரையும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்த பொழுது இன்று காலை 5 மணி அளவில் மாதாவரம் ஏரிக்கரை பின்புறம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது போலீஸ் காவலில் இருந்து திருவேங்கடம் (33 வயது) தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. தப்ப முன்ற திருவேங்கடத்தை போலீசார் சுட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டடியுடன் தப்பிய திருவேங்கடம் தற்போது உயிருடன் உள்ளாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது தொடர்பாக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நிகழ்ந்த சம்பவம் இந்த கொலை வழக்கில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.