ஹைட்ரோகார்பன் எடுக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வ.சேதுராமன் கூறுகையில்," மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு கிணறுகள் தோண்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை, உற்பத்தி கிணறுக்கு மட்டும் சுற்றுச்சூழல் அனுமதி தேவை என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக மீத்தேன், ஷேல், கச்சா எண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருள்களுக்கும் ஹைட்ரோகார்பன் என பெயரிட்டது.
அதன் பின்னர் வேதாந்தா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் வழங்கி, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக அந்த நிறுவனங்கள் தற்போது காத்திருக்கின்றன. அதே நேரத்தில் ஷேல் கேஸ் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என ஓஎன்ஜிசி கைவிட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்கின்ற அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ஆய்வு கிணறு தோண்ட கருத்து கேட்பு கூட்டம் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி, வேதாந்தா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உதவி செய்வதாக இந்த அரசாணை அமைந்துள்ளது.
இது முற்றிலும் தவறான நடவடிக்கை. எனவே இதுதொடர்பான அரசாணையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மீத்தேன் திட்டத்துக்கு ஆய்வு கிணறு தோண்டுவதற்கு கூட, அனுமதிக்காத நிலையில் அத்திட்டம் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. அதனைப் பின்னாளில் மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு மீத்தேன் திட்டத்தை கைவிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு 20- ஆம் தேதி (இன்று) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, உணவு உற்பத்திக் களமாக விளங்கும் காவிரி டெல்டாவில், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு முற்றிலும் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்." என்று கூறுகிறார்.