சபரிமலை ஐயப்பன் கோயில் வரலாற்றில் முதல்முறையாக இன்று முதல் புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்பட உள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான ஐயப்பன் கோயிலில் தற்போது தரிசனத்துக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலிருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிப்பாட்டுக்காகப் பம்பையில் குவிந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சபரிமலையில் வழிபாட்டுக்காக அதிகப்படியான கூட்டம் கூடியதால் வண்டிப்பெரியாரில் இருந்து பம்பை வரை வாகனங்கள் நகர முடியாத அளவுக்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு புதிய நடைமுறை ஒன்றைத் தேவஸ்தான போர்டு கொண்டு வந்துள்ளது. அதன்படி இன்று முதல் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய தனிவரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் ஒருநாளைக்கு 90 ஆயிரம் பேர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.